இந்தியா முழுவதும் சமீப காலமாக பரவி வரும் காய்ச்சல், தொடர் இருமலுக்கு இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை(எக்3என்2) வைரஸ் தொற்று தான் காரணமாக உள்ளதாக ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். கடந்த 2-3 மாதங்களாக இருமல், காய்ச்சல் பரவலான புழக்கத்தில் இருந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளது.

குளிர்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடைந்த போதிலும், இந்த காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல் முதியவர்கள் மற்றும் குழந்தைகளிடையே தீவிரமாகப் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் கடைபிடிக்க வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலை ஐசிஎம்ஆர் பரிந்துரைத்து உள்ளது.

நாடு முழுவதும் இருமல், சளி ஒருபக்கம் இருக்க மற்றோருபுறம் கண்மூடித்தனமான ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் கடுமையாக எச்சரித்து உள்ளது. பருவகால காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் நீடிக்கும். இது போன்ற ஆண்டிபயாட்டிக் அதிகமாக செலுத்துவதன் வாயிலாக உடம்பில் இயற்கையாக இருக்கும் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது என அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமோக்ஸிசிலின், நோர்ஃப்ளோக்சசின், ஓப்ரோஃப்ளோக்சசின், ஆஃப்லோக்சசின் மற்றும் லெவோஃப்ளோக்சசின் போன்றவை பயன்படுத்துவதால் வயிற்றுப் போக்குக்கு வழிவகுக்கும் என ஐசிஎம்ஆர் கடுமையாக எச்சரித்துள்ளது.