நீட் போட்டித் தேர்வு, நாடு முழுவதும் இன்று 500க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 5,453 மையங்களில் நடைபெறுகிறது. அந்தப் போட்டித் தேர்வு நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான 3 அடுக்கு கண்காணிப்பு வழிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெரும்பாலான தேர்வு மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நடைபெறுகின்றன. அதில் தமிழகத்தில்  31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் 1,50,000 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். அதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வு எழுத மாணவர் ஒருவர் முழுக்கை டி-ஷர்ட் உடன் நுழைய முயன்ற போது அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அதன் பின் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி அந்த மாணவர் அவரது அப்பா அணிந்திருந்த அரக்கை சட்டையை மாற்றிக் கொண்டு பின் தேர்வு எழுத சென்றுள்ளார். இச்சம்பத்தால் தேர்வு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.