தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அபர்ணா பாலமுரளி. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த சூரரைப் போற்று ‌ படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவர் தற்போது மலையாள சினிமாவில் தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் படத்தின் நாயகன் வினித் சீனிவாசனுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி எர்ணாகுளத்தில் உள்ள சட்ட கல்லூரியில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது ஒரு மாணவர் அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து கொடுத்து கைகுலுக்கினார். உடனே அந்த மாணவர் நடிகையின் தோளின் மீது கை போட்டார். அப்போது உடனே சுதாகரித்துக் கொண்ட அபர்ணா நைசாக நழுவி விட்டார். இருப்பினும் அந்த மாணவர் மீண்டும் அபர்ணா மீது கை போட முயற்சி செய்ததால் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் மாணவரை கண்டித்தனர்.

அதோடு அங்கிருந்தவர்களும் மாணவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மேடையில் அந்த மாணவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். அதோடு நான் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்யவில்லை என்றும், நான் அவரின் தீவிர ரசிகன் என்பதால் தான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் என்றும் மாணவர் கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரி சங்கமானது இந்த சம்பவம் குறித்து தனது சமூகவலைத்தளபக்கத்தில், அபர்ணாவின் மனதை காயப்படுத்தும் வகையில் நடைபெற்ற சம்பவத்திற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அதோடு இந்த சம்பவத்தை மிகவும் கவலைக்குரியதாக எடுத்துக்கொண்டுள்ளோம். விரும்பத்தாகாமல் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.