சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் நடிகை அபர்ணா பால முரளி. இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் இவர் வினித் ஸ்ரீனிவாசனுடன் தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் இருக்கும் சட்டக் கல்லூரியில் நடைபெற்றது.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த அபர்ணா பாலமுரளியிடம் மேடையின் முன்பிருந்த மாணவர் ஒருவர் வேகமாக மேடையில் ஏறி அவரின் அருகில் சென்றார். மேலும் கையில் இருந்த பூவை நடிகைக்கு கொடுத்து தோளில் கை போட்டார். இதனை எதிர்பார்க்காத அவர் சற்று விலகிச் செல்ல முயன்றார். இருப்பினும் அந்த மாணவர் அபர்ணாவின் கையைப் பிடித்து இழுத்து போட்டோ எடுக்க முயற்சித்தார்.

இந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதன்பின் தவறாக நடக்க முயன்ற மாணவரை அனைவரும் கண்டித்தனர். உடனே மேடையில் ஏறி அந்த மாணவர் அபர்ணாவிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தீவிர ரசிகர் எனவும் அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆர்வத்தில் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி மன்னிப்பு கேட்டார். தன்னை மன்னித்து விடும்படி நடிகை இடம் கூறி மீண்டும் கை கொடுக்க முயற்சித்தார்.

ஆனால் அந்த மாணவருக்கு கை கொடுக்க அபர்ணா மறுத்துவிட்டார். இந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனால் ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகையிடம் தவறாக நடக்க முயற்சித்த மாணவரை சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கின்றது.