ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயண முன்பதிவு அலுவலகம் அருகே 80 அடி உயரமுள்ள கண்காணிப்பு கோபுரம் அமைந்துள்ளது. கடந்த 18-ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க நபர் கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று 1/2 மணி நேரம் போராடி அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கி உள்ளனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் என்பது தெரியவந்தது. அவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சூரம்பட்டி பகுதியில் நடந்த திருட்டு வழக்கு குறித்தும், கூட்டாளிகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் செல்வன் மதுபோதையில் தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.