நாமக்கல் மாவட்டத்திலிருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்திற்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் இடையே சருவ மலை அமைந்துள்ளது. இந்த மலையை சுற்றி மணியாரம் புதூர், கணவாய் பட்டி, தோளூர், எம் ராசாம்பாளையம், அணியாபுரம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் சருவ மலையில் ஏராளமான மரங்கள் செடி, கொடிகள் இருக்கிறது. இந்த மலையை சுற்றிலும் வசித்து வரும் கிராம மக்கள் தங்களது கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக இந்த மலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அணியாபுரம் கொங்கு குளத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதனையடுத்து காற்று வேகமாக வீசியதால் இந்த தீ பரவி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பரவியுள்ளது. இதன் காரணமாக சருவ மலையில் உள்ள ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மலைப்பகுதி என்ற காரணத்தினால் தீயணைப்பு வீரர்களால் அங்கு செல்ல முடியவில்லை. இந்த பகுதியில் சாலை வசதி இல்லை. அதனால்  நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் அடிக்கடி தீ விபத்து நடைபெறுவதாக அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.