ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இவர் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு 43,983 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்ததற்கு இரட்டை இலை சின்னம் தான் காரணம் என தற்போது அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறியதாவது, இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் தான் அதிமுக இவ்வளவு வாக்குகள் பெற்றிருந்தது. ஒருவேளை இரட்டை இலை சின்னம் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால் அதிமுகவின் தோல்வி இன்னும் படுமோசமாக இருந்திருக்கும். அதன்பிறகு திமுகவின் வெற்றி என்பது மக்களால் வழங்கப்பட்டது கிடையாது. பணத்தால் வாங்கப்பட்டது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால் தான் தாங்கள் போட்டியிடவில்லை எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.