கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் பகுதியில் சுவாமிநாதன்(78) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஸ்டீபன், பால்ராஜ், சுஜின் ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றனர். திருமணமாகாத சுஜினுடன் சாமிநாதன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சுவாமிநாதன் படுத்த படுக்கையானார். தனக்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தை திருமணமான 2 மகன்களுக்கும் எழுதி கொடுத்துவிட்டார். மேலும் 1 1/2 சென்ட் இடத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தந்தையை கவனிப்பதில் 3 மகன்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நீ பார்க்க வேண்டியது தானே என மூன்று பேரும் அலட்சியமாக தந்தையை கவனிக்காமல் இருந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுவாமிநாதன் பத்மநாபபுரம் முதியோர் பாதுகாப்பு நல தீர்ப்பாயத்தில் தனது மகன்களிடமிருந்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொகை வாங்கி தருமாறு மனு அளித்துள்ளார்.

நேற்று பத்மநாதபுரம் சப்-கலெக்டரும், தீர்ப்பாயத்தின் நடுவருமான கௌஷிக் சுவாமிநாதனின் 3 மகன்களிடமும் விசாரணை நடத்தியுள்ளார். இதனையடுத்து ஆட்டோவில் அழைத்து வரப்பட்ட சுவாமிநாதனிடம் சப்-கலெக்டர் கீழே இறங்கி வந்து நலம் விசாரித்தார். இறுதியாக 3 மகன்களும் தலா 2 ஆயிரம் வீதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு ஒரு மகன் என மாறி மாறி தந்தையை பராமரிக்க வேண்டும் எனவும் சப்-கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.