தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், தி இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடரின் ஒரு போட்டியில் தனது வயதை மறந்து பாய்ச்சலுடன் விளையாடிய சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் விளாசிய பந்து எல்லைக்குச் செல்லாமல் தடுக்க, 55 வயதான ரோட்ஸ் மைதானத்தில் பாய்ந்து தடுத்து, அவரது இளமை காலத்தின் பாய்ச்சல்களை நினைவுபடுத்தினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு, ரசிகர்கள் அவரின் திறமையை பாராட்டி வருகின்றனர்.

அதேவேளை, அவர் போட்டிக்கு முன் யோகா பயிற்சிகளில் ஈடுபட்ட வீடியோவும் வைரலாகி, அவரது உடல் நலத்தின் முக்கியத்துவம் குறித்து பேசப்படுகிறது.கடந்த  2024 ஆம் ஆண்டு The Other Side of Dilip என்ற ஸ்பாட்டிபை பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், ஜான்டி ரோட்ஸ் தனது மனைவி யோகா ஆசிரியர் என்பதையும், ஆனால் அவர் மிகக் குறைவாகவே யோகா செய்வதையும் தெரிவித்துள்ளார். “நான் தினமும் 15 நிமிடங்கள் மட்டும் மொபிலிட்டி யோகா பயிற்சி செய்கிறேன்” என்றார். மேலும் தொடர்ச்சியான பயிற்சியே வளர்ச்சிக்கு அடிப்படை” என்று அவர் தெரிவித்துள்ளார்.