புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டியில் வசிக்கும் மாணவிகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்ததும் மாணவிகள் தஞ்சாவூரில் இருந்து கறம்பக்குடி வழியாக பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து கண்டக்டர் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பள்ளி மாணவிகள் குளத்தூர் நாயக்கர்பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்து வந்ததும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கண்டக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது, குளத்தூர் நாயக்கர் பட்டி, தஞ்சாவூர் புதுக்கோட்டை ஆகிய மார்க்கத்தில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தினால் பள்ளி செல்பவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.