விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெள்ளையாபுரத்தில் கண்ணன்-சுஜிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தர்ஷன்(12) சிவகாசியில் இருக்கும் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக தர்ஷன் சிவகாசியில் இருக்கும் அகாடமியில் சேர்ந்து ஹாக்கி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் பயிற்சியாளர் நாகராஜின் ஆலோசனைப்படி தர்ஷன் கண்களை கட்டிக்கொண்டு ஹாக்கி விளையாடும் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சிவகாசி திருமண மண்டபத்தில் வைத்து நோவா உலக சாதனை புத்தகம் தர்ஷனின் சாதனையை புத்தகத்தில் பதிவு செய்வதற்கான நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் தர்ஷன் 1 மணி நேரம் ஒரு நிமிடம் கண்களை கட்டிக்கொண்டு ஹாக்கி விளையாடி சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து தர்ஷனுக்கு நோவா உலக சாதனை புத்தகம் அமைப்பினர் சான்றிதழ்களை வழங்கி உள்ளனர். இதுகுறித்து சிறுவன் கூறியதாவது, தற்போது ஒரு நிகழ்த்திய சாதனையை விரைவில் நானே முறியடிப்பேன். எனக்கு இந்தியா ஹாக்கி அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. எனது லட்சியமும் அதுதான். எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர்களுக்கு மிகவும் நன்றி என கூறியுள்ளார். இந்த சிறுவனை விருதுநகர் கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.