ஆந்திர மாநிலத்தில் உள்ள கனகிரி பகுதியில் வசித்து வருபவர் அங்கய்யா (28). இவர் கனகிரி பகுதியில் உள்ள கோவிலுக்கு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சென்றுள்ளார். பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கய்யா கோவிலுக்குள் மெல்ல சென்று யாரும் பார்க்காதவாறு மெதுவாக மூன்று பித்தளை பாத்திரங்களை திருடிக் கொண்டு சென்றுள்ளார். இதனை கவனித்த கோயில் நிர்வாகத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதனால் விரைந்து வந்த காவல்துறையினர் கோவிலில் திருட்டு நடைபெற்ற சில மணி நேரத்தில் குற்றவாளி அங்கய்யாவை கையும் களவுமாக பிடித்து கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான பித்தளை பாத்திரங்களை மீட்டு கொடுத்தனர். மேலும் அங்கய்யா மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு விசாரித்த நீதிபதி பாரத் சந்திரா குற்றவாளிக்கு வினோதமான முறையில் தீர்ப்பளித்து தண்டனை வழங்கினார்.

இந்தியாவில் திருத்தி அமைக்கப்பட்ட புதிய சட்டங்களின்படி, நவம்பர் 2 ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை கனகிரி நகரின் முக்கியமான பகுதிகள் மற்றும் தெருக்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை அங்கய்யா சுத்தம் செய்ய வேண்டும். இதனை தினமும் நகராட்சி கமிஷனர் மற்றும் காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். நீதிமன்றம் அளித்த இந்த சீர்திருத்தப்பட்ட தண்டனை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.