கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். அந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் பிரசாதம் வழங்கப்படும். அந்தப் பிரசாத கடையை திருச்சியை சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த மதனிகா என்ற பக்தர் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே உள்ள பிரசாத கடையில் புளியோதரை வாங்கி உள்ளார். அதன்பின் பிரசாத பார்சலை பிரித்துப் பார்த்தபோது புளியோதரையில் உயிரிழந்த குட்டி பாம்பு ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக கோயில் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சாமிதுரை விசாரணை மேற்கொண்டார். இதனை அடுத்து விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த பிரசாதங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் புளியோதரை பார்சலில் பாம்பு எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.