திருச்சி மாவட்டத்தில் உள்ள அயித்தாம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா(18) என்ற மகள் உள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் எம்.வி.எம் அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். நேற்று காலை நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் மீனா உள்ளிட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்திற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு மீனாவின் காலில் கடித்ததால் அவர் அலறி சத்தம் போட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேராசிரியர்கள் துரிதமாக செயல்பட்டு மீனாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாணவிகள் ஒன்று சேர்ந்து அந்த பாம்பை அடித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விசாகன் மீனாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் மீனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.