உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ள சக்திநகர் பகுதியில், ஒரு இளைஞர்மீது ‘ஆபாச மெசேஜ்கள்’ (Obscene Messages) அனுப்பியதாகக் குற்றம் சாட்டி, இரண்டு இளம் பெண்கள் ஒருவரைச் சந்தைக்கு நடுவே வைத்துச் சரமாரியாகத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தங்கள் பயிற்சி வகுப்புகளில் இருந்துத் திரும்பியபோது, அந்த இளைஞரை வழிமறித்து இந்தக் கைகலப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வைரல் வீடியோவில், அந்த இளைஞர் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிக்கும்போது, அந்தப் பெண்கள் அவரை சராமாரியாக உதைத்தும், கன்னத்தில் அறைந்தும், செருப்பால் தாக்கியும் உள்ளனர்.

அந்த இளைஞர் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு அநாகரிகமாகப் பேசித் துன்புறுத்தி வந்தவர் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை வேடிக்கைப் பார்த்த பொதுமக்கள் யாரும் அவர்களைத் தடுக்க முன்வரவில்லை. மாறாக, சில குரல்கள், பெண்களை ‘செருப்பால் அடியுங்கள்’ என்று உற்சாகப்படுத்தியதும் கேட்கிறது.

சட்ட நடவடிக்கை எடுக்காமல் நேரடியாகப் பொதுவெளியில் தாக்கியதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், தொடர் துன்புறுத்தலுக்கு இதுவே சரியான பதிலடி என்றுப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது குறித்துக் காவல்துறையில் அதிகாரப்பூர்வப் புகார் எதுவும் பதிவாகவில்லை.