திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனர் பாலசுப்பிரமணியம் என்பவரின் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் சேவிதா பகவதி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரணம் பணிகளுக்காக முதல்வரிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், நெல்லையில் சிறிது சிறிது சேர்த்த பணத்தையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமியை பார்த்து நெகிழ்ந்தேன். நெஞ்சம் நிறைந்தேன். மனிதம் காப்போம் என குறிப்பிட்டுள்ளார்.