தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகை தினசரி அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்திருந்தனர். இதனிடையே தோட்டக் கலை பணியாளர்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படகு சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

அதோடு மலை ரயில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம்காட்டி வருவதால் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெற காத்திருக்கின்றனர். கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு தினமும் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மலை ரயில் பாதை அடர் வனப் பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ளது.

இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டு அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகை கண்டு ரசிக்க பெரும்பாலான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வருவதால் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க இப்பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.