
பிரபல ஆயுர்வேத மருத்துவராக இருந்த தேவேந்திர் ஷர்மா(67), பல கொலை வழக்குகளில் குற்றவாளியாக இருந்து, திகார் சிறையில் வாழ்நாள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவராவார். இவர் கடந்த ஆகஸ்ட் 2023ல் பரோலில் வெளிவந்த பின்னர் சிறைக்குத் திரும்பவில்லை.
இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் பல மாதங்களாக தேடிவந்த நிலையில், ராஜஸ்தானின் டௌசா மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் யோகி வேடத்தில் ஒளிந்து வாழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் கொலைகாரராக அறியப்படும் தேவேந்திர், கடத்த 2002 முதல் 2004 வரை டாக்சி மற்றும் லாரி டிரைவர்களை கொன்று, அவர்களின் வாகனங்களை கறுப்பு சந்தையில் விற்று வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவர்களது உடல்களை உத்தரப்பிரதேசம் காஸ்கஞ்சில் உள்ள முதலைகளால் நிரம்பிய ஹஸாரா கால்வாயில் வீசி சாட்சிகளை அழித்தார். இவரது மீதான குற்றச்சாட்டுகளில் 27க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல், கொள்ளை வழக்குகள் உள்ளன. மேலும், இவர் 1998-2004 காலத்தில் 125க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரகம் மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதும் போலீசாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று , தேவேந்திர் பரோலில் இருந்து தலைமறைவானது இது முதல் முறை அல்ல. அதாவது, இவர் கடந்த 2020ஆம் ஆண்டிலும் பரோலில் இருந்து மறைந்திருந்தார். பின்னர் 7 மாதங்கள் கழித்து பிடிபட்டார். தற்போது, 6 மாத தீவிர தேடலுக்கு பிறகு, டெல்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா, அலிகர் உள்ளிட்ட நகரங்களில் கண்காணிப்பு செய்த போலீசார், இவரை டௌசாவில் உள்ள ஆசிரமத்தில் கைது செய்துள்ளனர். தற்போது அவர் மீதான அனைத்து வழக்குகளும் புதிதாக ஆய்வு செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.