மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிந்துதுர்க் பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கடந்த வருடம் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினத்தை முன்னிட்டு சிவாஜி சிலை திறந்து வைக்கப்பட்ட நிலையில் சரியான முறையில் கட்டுமானம் இல்லாததால் தற்போது இடிந்து விழுந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பகல் ஒரு மணி அளவில் சிவாஜி சிலை முற்றிலுமாக கீழே விழுந்து தரைமட்டமானது. இத தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் மோடி அரசை பலரும் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மோடி அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் வருத்தம் தெரிவித்த நிலையில் 100 முறை மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நேற்று கூறினார். இந்நிலையில் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததற்கு தற்போது பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது, இந்திய தாயின் மகன்களான நாங்கள் ஒருபோதும் சிவாஜியை அவமதிக்க மாட்டோம். நாங்கள் சிவாஜியை கடவுளாக வணங்குகிறோம். மேலும் தற்போது சிவாஜி சிலை உடைந்து விழுந்ததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்‌. இந்திய மண்ணின் கடவுள் ஆன சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் கிடையாது. இந்த சம்பவத்திற்காக சிவாஜியிடம் தலை குனிந்து  காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.