
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாலைமேடு கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று சஞ்சய் மோட்டார் சைக்கிளில் பாணாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புலிக் கல் அருகே சாலையோரம் இருந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் பைப்லைன் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதால் நிலைதடுமாறி சஞ்சய் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லாததால் அவர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் சஞ்சய் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த மாணவனின் உறவினர்கள் பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் தான் சஞ்சய் உயிரிழந்தார் என குற்றம் சாட்டி அங்குள்ள மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.