கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயராணி(53) வெள்ளக்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர்களது இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகின்றனர். நேற்று கணவர் வேலைக்கு சென்ற பிறகு விஜயராணி இருசக்கர வாகனத்தில் துடியலூர் ரயில் நிலையம் அருகே சென்றுள்ளார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தண்டவாளத்தை நோக்கி நடந்து சென்று கோவை நோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிதறிய நிலையில் கிடந்த விஜய ராணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குடும்ப பிரச்சினை காரணமாக விஜயராணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.