கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வாங்குவதற்காக விஜயகுமார் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று கிடங்கு மேலாளரான சந்திராவை சந்தித்துள்ளார்.

அப்போது சந்திரா கட்டுமான பணிக்கு தேவையான கம்பிகளை கொடுப்பதற்கு 700 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து விஜயகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயக்குமார் சந்திராவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.