தொடர்ந்து மழை பெய்ததால் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஒருநாள் உலக கோப்பை தோல்விக்கு பின் சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 3 வடிவ கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டி20 தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி வீரர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றனர்.

இந்நிலையில் இன்று முதல் டி20 போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் டர்பனில் இந்திய நேரப்படி 7:30 மணிக்கு மோதுவதாக இருந்தது. இதனால் டாஸ் தாமதாக போடப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் டர்பனில் நடக்கவிருந்த முதல் டி20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ இதனை ட்விட்டரில் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.