தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதாக உள்ள ஸ்ரீதர் என்பவர் தனது ஜாமீன் வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறுக்கு விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்படுகிறார்கள். ஒரு சாட்சியை விசாரிப்பதற்கு ஒன்றரை மாதங்கள் ஆகிறது.

தற்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கு இறுதி கட்ட விசாரணையில் இருக்கிறது. இந்த சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க நேரிடும். இன்னும் 6 காட்சிகளை மட்டும் தான் விசாரிக்க வேண்டும். எனவே கோடை விடுமுறை காலத்திலும் கீழமை நீதிமன்றங்கள் வழக்கை விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதனையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.