தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் வருடம் ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு ரூ.15 கோடி சம்பளம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2019 ஆம் வருடம் மே மாதம் படம் ரிலீஸ் ஆகிய நிலையில், இதுவரை ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு ரூ.4 கோடி பாக்கி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பளம் பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பினரும் சமரசம் ஏற்படுத்திக்கொள்வதாக கூறினர். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு வந்தபோது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பாக இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, அதற்கான மனு அளிக்கப்பட்டது. இதன் வாயிலாக இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு முடிக்கப்படும் .