அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று(மார்ச்.4) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா(21) என்பவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது மது போதையில் இருந்த மாணவர் ஆர்யா, அருகிலிருந்த அமெரிக்க பயணி மீது சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. மேலும் விமான பணியாளர்கள் பல முறை கூறியும் இருக்கையில் அமராமல் தகராறு செய்த அந்த மாணவர் சக பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது.

அதன்பின் இந்திய மாணவர் குடி போதையில் தகராறு செய்வதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானி, டெல்லியிலுள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அங்கு பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் மாணவரை அழைத்துச் சென்று விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் சிஐஎஸ்எப் வீரர்களிடமும் மாணவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிகிறது. இந்திய மாணவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்தனர். இதேபோன்று கடந்த வருடம் நவம்பர் 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து, டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஸ்ரா என்ற இந்திய பயணி குடி போதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.