ஆடம் ஜம்பா ஆடவர் ஒருநாள் போட்டியில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களின் தேவையற்ற பட்டியலில் இணைந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான சாதனைக்கு மற்றொரு சொந்தக்காரரானார் ஆடம் ஜாம்பா. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 10 ஓவரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 113 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இதில் 2006 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மிக் லூயிஸ் செய்த மோசமான சாதனையை ஆடம் ஜாம்பா பகிர்ந்து கொண்டார். அன்று ஜோகன்னஸ்பர்க்கில் லூயிஸ் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இதே தென்னாப்பிரிக்கா அணியிடம் 113 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மேலும் பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் ஆகியோர் 110 ரன்களை கொடுத்து கூட்டாக 3வது இடத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியனில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஹென்ட்ரிச் கிளாசென் மற்றும் அரைசதமடித்த டேவிட் மில்லர் மற்றும் வாண்டர் டசன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா ஆஸி.யின் முன் அபார ஸ்கோரை இலக்காக வைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் எடுத்தது.

கிளாசன் 83 பந்துகளில் 13 பவுண்டரிகள், 13 சிக்ஸர்களுடன் 174 ரன்கள் குவித்தார். 57 பந்துகளில் சதம் அடித்த கிளாசன் பின்னர் 26 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். 45 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்த மில்லர், கிளாசனுக்கு சிறப்பான ஆதரவை வழங்கினார். இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 92பந்துகளில் 222 ரன்கள் சேர்த்தனர். டேவிட் மில்லர் 45 பந்துகளில் (6 பவுண்டரி, 5 சிக்ஸர்) 82 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். ஆட்டத்தின் கடைசி 9 ஓவர்களில் 164 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதில் குறிப்பாக முதல் 32வது ஓவர் வரையில் ஹென்ரிச் கிளாசன் 25 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பின்னர் தான் அவரது சூறாவளி தாக்குதல் நடந்துள்ளது. 50 ஓவர் முடிவில் அவர் 83 பந்துகளில் 174 ரன்கள் குவித்துள்ளார்.கடைசி 58 பந்துகளில் மட்டும் கிளாசென் 150 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 252 ரன்களுடன் ஆல் அவுட் ஆனது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 99 ரன்கள் எடுத்தார். ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.