மெக்சிகோவில், போதை பொருள் கடத்தும் கும்பலின் தலைவரை கைது செய்ததால் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

மெக்சிகோ நாட்டின் சினாலாவோ மாகாணத்தில் இயங்கி வரும் முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ஜோகின் குஸ்மான் லோரா கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகு, அவரின் மகனான ஓவிடியோ குஸ்மான் லோபஸ், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரானார்.

இவரை அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளின் காவல்துறையினர் பல வருடங்களாக தேடி வந்த நிலையில், ஆறு மாதங்களாக தீவிரமாக போராடி கடந்த வியாழக்கிழமை அன்று கைது செய்தனர். அதனையடுத்து அவரை உடனே மெக்சிகோ நகருக்கு மாற்றி சிறையில் அடைத்து விட்டனர்.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போதை பொருள் கடத்தல் கும்பல் சினாலாவோ மாகாணம் முழுக்க கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். சாலைகளில் ஆயுதங்களுடன் சுற்றி தெரியும் அவர்கள் பேருந்து, லாரி போன்ற வாகனங்களை நிறுத்தி தீ வைத்து கொளுத்தினர்.

மேலும், பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் மீதும் கொடூரமாக துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார்கள். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் மேற்கொண்டதில் வீரர்கள் மூன்று பேர் பலியானதோடு 18 நபர்கள் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.