திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர் தோட்டத்தை மாரியப்பன் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அன்று திடீரென தோட்டத்து வீட்டில் மாரியப்பன் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த அவரது மகன், தனது தந்தையின் உடலை அடக்கம் செய்து, அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் மாரியப்பனிடம் வேலை பார்த்த 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்தச் சிறுவன் 6.5 பவுன் தங்க நகையை திருடியதை மாரியப்பன் கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயத்தில் பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்ததாக கூறினார்.  இதையடுத்து காவல்துறையதுறையினர் அச்சுறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.