நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகள் ஏழை  எளிய மக்களுக்காக பல சிறப்பு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஏழைகளுக்கு இலவச உணவுப் பொட்டலங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்து உள்ளார். “அன்னபூர்ணா உணவு பாக்கெட்” திட்டத்தில் மாதந்தோறும் ரூபாய்.392 கோடியானது செலவாகும். இத்தகவலை ராஜஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் மாநிலத்தின் 1.06 கோடி குடும்பங்களுக்கு இந்த உணவு பொட்டலங்களை வழங்குவதற்கு முதல்வர் கெலாட் முக்கிய முடிவை எடுத்து உள்ளார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் இலவசமாக விநியோகம் செய்யப்படும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் தலா 1 கிலோ பருப்பு, சர்க்கரை, உப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய், தலா 100 கிராம் மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் 50 கிராம் மஞ்சள் தூள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு பாக்கெட்டின் விலையானது ரூ.370 ஆக இருக்கும். இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 392 கோடி ரூபாய் செலவாகும். இதன் கீழ் தகுதியான நபர்களின் பதிவு ஏப்ரல் 24ம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகவிலை நிவாரண முகாமில் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.