மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் துணை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஏராளமான மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கடந்த 2018 -ம் ஆண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த ஒரு மாணவிக்கு தேர்வு எழுத உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அனுமதி கொடுத்ததாக மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். அதன் பிறகு அந்த மாணவி வேறு பள்ளியில் சேர இருந்ததால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக கேந்திரிய வித்யாலயா பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும். இது மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் மூன்று வாரங்களில் துணை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டார்.