தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டதற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது நேற்று அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு, எம்எல்ஏ டிஆர்பி ராஜா தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் நாசருக்கு திமுக கட்சியில் மேயர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் என பல பதவிகளை வழங்கி அழகு பார்த்தவர் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால் நாசர் தொண்டர்கள் மீது கோபப்பட்டதோடு அவர்கள் மீது கற்களை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக திருவள்ளூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும்போது எப்போதும் அமைச்சர் நாசரை புகழ்ந்து விட்டு தான் பேச தொடங்குவார். ஆனால் நேற்று திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்லோரையும் புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாரின் அமைச்சர் நாசர் பற்றி மட்டும் பெரிதாக பேசவில்லை. இதைத்தொடர்ந்து சிறுமி டானியாவை முதல்வர் நலம் விசாரித்த போது அமைச்சர் நாசர் உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை முதல் ஸ்டாலின் பேஸ்புக்கில் வெளியிடும்போது அமைச்சர் நாசரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு வெளியிட்டார்.

இந்த காரணங்களால் அமைச்சர் நாசர் விரைவில் அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டது. அதன்பிறகு அமைச்சர் நாசரின் மகனும் பல்வேறு விதமான பிரச்சினைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து மேலிடத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது. மேலும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த புகார்களின் காரணமாகத்தான் அமைச்சர் நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டெல்டா பகுதிக்கு அமைச்சர் இல்லையே என்ற ஒரு குறை நிலவிய நிலையில் தற்போது மன்னார்குடி தொகுதியின் எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.