ஐபிஎல் 36வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணி..

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் வெற்றிப் பாதையில் களமிறங்கியுள்ளது. தொடர்ந்து 4தோல்விகளுக்குப் பிறகு ஒரு வெற்றியை ருசித்தது. கொல்கத்தா 21 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் முதலில் பேட் செய்த கேகேஆர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. பின்னர் பெரிய இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விராட் கோலி (54; 37 பந்துகளில் 6 பவுண்டரி), மஹிபால் லோம்ரோர் (34; 18 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சர்) மட்டும் போராடினர். தினேஷ் கார்த்திக் (22; 18 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆக்ரோஷமாக விளையாட முடியவில்லை. டுபிளெசிஸ் (17; 7 பந்துகளில் ஆக்ரோஷமாக விளையாடினார். ஆனால் நீண்ட நேரம் கிரீஸில் நிலைக்கவில்லை. கொல்கத்தா பந்துவீச்சாளர்களில் வருண் சக்ரவர்த்தி (3/27), சுயாஷ் சர்மா (2/30) ஆகியோர் அசத்தினர்.ரசல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ஜேசன் ராய் (56; 29 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்) ஆரம்பத்திலேயே ஆக்ரோஷமாக விளையாடினார். ஷாபாஸ் அகமது வீசிய 6வது ஓவரில் மிரட்டினார். அவர் 2, 3 மற்றும் 4  பந்துகளை தொடர்ந்து ஸ்டாண்டில் அடித்து  ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார். மேலும் கடைசி பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்டார்.அந்த ஓவரில் 25 ரன்கள் கிடைத்தது. பின் வைஷாக் விஜய்குமாரின் 10வது ஓவரில் ராய் அவுட் ஆனார்..

முடிவில் நிதிஷ் ராணா (48; 21 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். கடைசியில் ரிங்கு சிங் (18; 10 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் அய்யர் (31; 26 பந்துகளில் 3 பவுண்டரி), தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் (27; 29 பந்துகளில் 4 பவுண்டரி) சிறப்பாக விளையாடவில்லை. ஆர்சிபி பந்துவீச்சாளர்களில் ஹசரங்கா மற்றும் விஜய்குமார் வைசாக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.