நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு (RCB) அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த மெகா ஃபைனல் போட்டியில் விராட் கோலி ரன் சேஸிங்கில் அவுட்டாகாமல் இருந்து அணியை எப்படி வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை மைதானத்தில் நிரூபித்துக் காட்டினார். போட்டி முடிந்ததும் ஆர்சிபி வீரர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த வேளையில், இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி ‘எமர்ஜிங் பிளேயர்’ மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்ததற்கான விருதுகளை வாங்க வந்திருந்த 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை, விராட் கோலி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் தோளில் கைபோட்டு, மைதானத்தின் ஓரமாக நின்றபடி விராட் கோலி அவருக்கு நீண்ட நேரம் கிரிக்கெட் ஆலோசனைகளை வழங்கினார். கோலியின் உடல்மொழி மற்றும் கைகளின் சைகைகளை வைத்துப் பார்க்கும்போது, எப்படி கவனச் சிதறல் இல்லாமல் இலக்கை நோக்கி ஆட வேண்டும், அழுத்தமான சூழ்நிலையிலும் எப்படி நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ரகசியங்களை அவர் வைபவ்வுக்குக் கற்றுக்கொடுத்தது தெளிவாகத் தெரிந்தது.
Virat with vaibhav Vaibhav Suryavanshi ❤️ #RCBvsGT pic.twitter.com/XjY7lJqw2i
— Chiku Kumar (@Chiku3891121) May 31, 2026
இந்த 2026 ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடி, 237.30 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் 72 சிக்ஸர்களுடன் 776 ரன்கள் குவித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள வைபவ்வுக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலம் நிலைத்து நிற்பதற்கான இந்த ‘கோலி மந்திரம்’ ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக அமைந்துள்ளது.
