ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் பருவமழை பொய்த்தது. ஆகவே அங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதே சமயம் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீரால், அருகே உள்ள பல கிராமங்களில் நெல் விவசாயம் இந்த ஆண்டு காப்பாற்றப்பட்டது.

மேலும் ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை, காவனூர், பாப்பாக்குடி, ஐயர்மடம் போன்ற பல கிராமங்களில் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை நீரால், விவசாயிகள் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி, பின் நன்கு விளைந்தது. இந்நிலையில் தற்போது அந்த கிராமப் பகுதிகளில் எந்திரத்தின் மூலம் நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெறுகிறது. இதனையடுத்து அறுவடை செய்த நெற்கதிர்களை விவசாயிகள் உலர வைக்கின்றனர். பின் அதை வியாபாரிகளிடம் விற்று பணம் பெறுகின்றனர்.

மேலும் இது குறித்து பாப்பாக்குடி மற்றும் சூரங்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியுள்ளதாவது, மாவட்டத்தின் பல இடங்களில் சரிவர பருவமழை  இல்லாததால் நெற்பயிர்கள் கருகின. பின் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பல கண்மாய்களில் வைகை நீரை கொண்டு நிரப்பி, அதை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்தனர். தற்போது அறுவடை செய்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல்லுக்கு அதிக விலையும் கிடைத்துள்ளதாக கூறினார்.