ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் என்ற பகுதியில் வசிப்பவர் சின்ன அடைக்கான்(28). டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்த இவருக்கு சுமதி (25) என்ற  மனைவி இருந்தார். சுமதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17-ந் தேதி அன்று இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனையடுத்து குழந்தை பிறந்து 3 நாள் ஆன நிலையில், நேற்று மாலையில் மனைவி மற்றும் குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உடனே அவரது கணவன் ஒரு ஆட்டோவை அழைத்து வந்து, அதில் சுமதி, பிறந்த குழந்தை மற்றும் அவர்களது உறவினரான காளியம்மாள் (50) ஆகியோருடன் வீட்டிற்கு திரும்பி  கொண்டிருந்தனர். அப்போது ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை நதிபாலம் அருகே ஆட்டோ வந்து கொண்டிருக்கும்போது, ராமேஸ்வரத்தில் இருந்து கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக அந்த ஆட்டோ மீது கார் மோதியதில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி, உள்ளே இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த சின்ன அடைக்கான், மனைவி, பிறந்த குழந்தை மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காளியம்மாளை அங்கு வந்த வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் விக்னேசை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.