பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. அதன் பிறகு டெல்லியில் ராகுல் காந்தி வசித்து வரும் அரசு இல்லத்தை ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என அரசு சார்பில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி தான் 19 வருடங்களாக டெல்லியில் வசித்து வந்து அரசு இல்லத்தை பூட்டி சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அப்போது ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி மற்றும் தாயார் சோனியா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். ராகுல் காந்தி அரசு இல்லத்தை காலி செய்த பிறகு அங்கு பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, என்னிடம் இருந்து அரசு இல்லத்தை பறித்தது பற்றி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உண்மையை பேசுவதற்கு எத்தகைய விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார். மேலும் ராகுல் காந்தி தன்னுடைய போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வார் என அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.