
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நேற்று சம்விதன் சம்மான் சம்மேளன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அவர் இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறினார். மேலும் எந்தெந்த அரசமைப்புகளில் எந்த சாதிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளார்கள் என்ற தரவுகளை சேகரிக்க வேண்டும்.
சுமார் 90 சதவீத மக்களுக்கு கல்வி அறிவும் திறனும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இல்லாமல் இருக்கின்றனர். இதுவரை மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அந்த பட்டியலில் தலித் அல்லது பழங்குடியின பெண் யாராவது இருப்பார்களா என்று ஆய்வு செய்தேன்.
ஆனால் தலித் பழங்குடியினர் அல்லது ஓபிசி பிரிவை சேர்ந்த பெண்கள் ஒருவர் கூட அந்த பட்டியலில் இல்லை. அது மட்டும் இல்லாமல் ஊடகங்களில் உயர் மட்டத்தில் இருக்கும் தொகுப்பாளர்களில் ஒருவர் கூட இந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் கிடையாது. இருப்பினும் பாட்டு, டான்ஸ், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் குறித்தும் மட்டுமே ஊடகங்கள் பேசுகிறது.
சாதாரண விவசாயிகளைப் பற்றியோ, தொழிலாளர்களைப் பற்றியோ ஊடகங்கள் பேச தவறிவிட்டது. அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர், பழங்குடியினர் ஆகியோரால் தான் பாதுகாக்கப்படுகிறது. எனவே அரசியலமைப்பு சட்டம் என்பது நமது நாட்டில் வாழும் 10 சதவீத மக்களுக்கானது கிடையாது. அது அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என பேசி உள்ளார்.