
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டு வருவதால் பலரும் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கியமான மூன்று பேருந்து நிலையங்களில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 30 ஆம் தேதி வரை சென்னை கோயம்பேடு, கேளம்பாக்கம், மாதாவரம் புதிய பேருந்து நிலையம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்த விவரம் குறித்த அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது, தமிழ்நாடு அரசு தீபாவளி முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதைத்தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் பெங்களூர் வழியாக செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்க தயாராக உள்ளன. மேலும் மாதாவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திராவிற்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.