ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக். இவர் பாஜகவின் மூத்த தலைவர். இவர் புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நேரடியாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். அதாவது தனியார் சேனல் ஒன்றுக்கு சத்திய பால் மாலிக் அளித்த பேட்டியின் போது கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக சென்றால் பாதுகாப்பு இல்லை என கருதி சிஆர்பிஎஃப் தனி விமானம் கேட்டது. இது குறித்து நான் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்த போது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவர்கள் விமானம் தந்திருந்தால் 40 வீரர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

இது குறித்து நான் பிரதமர் மோடியிடம் பேசியபோது அவர் இது தொடர்பாக வெளியே எதுவும் பேச வேண்டாம் என என்னிடம் கூறினார் என சத்தியபால் மாலிக் தெரிவித்தார். இதற்கு மத்திய அரசு எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்த நிலையில் அவருக்கு தற்போது சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது அவர் ஆளுநராக இருந்தபோது காஷ்மீரில் அனில் அம்பானிக்கு சொந்தமான காப்பீடு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு அந்நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக சத்திய பால் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்த நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் ஏப்ரல் 27 முதல் 29-ஆம் தேதிக்குள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்துள்ளார்.