
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் பிரான்ஸ் புறப்படுவதற்கு முன்பாக, அவர் செல்ல இருந்த விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது. அதில் பயங்கரவாதிகள் விமானத்தை தாக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி செம்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
இதுகுறித்து மும்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “கடந்த 11ஆம் தேதி மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள பயன்படுத்த இருக்கும் விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் தீவிரத்தை நாங்கள் கருத்தில் கொண்டு மற்ற விசாரணை நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணை நடத்தினோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர் மனநலம் சரியில்லாதவர் என்பதும் தெரியவந்துள்ளது.