தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் போன்றவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் ஜனவரி 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்பட இருக்கிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் கோவையிலிருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம் 1 மணிக்கு திண்டுக்கல்லை அடையும்.

அதன்பிறகு மறு மார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5.30 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் அறையுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் திண்டுக்கல்லில் இருந்து கோவை செல்லும் சிறப்பு ரயில்கள் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.