திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அசோக்(25) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அரும்பாக்கத்தை சேர்ந்த காவிய பிரியா என்ற பெண்ணும், அசோக்கும் காதலித்து வந்தனர். இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் அசோக்கும், காவியபிரியாவும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் காவிய பிரியா கர்ப்பமானார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் காவிய பிரியா கோவத்தில் சென்னையில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த மாதம் 23-ஆம் தேதி காவிய பிரியாவிற்கு வளைகாப்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு அசோக் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைக்கவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அசோக் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.