
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவரும் உசிலம்பட்டியை சேர்ந்த கலையரசியும்(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து விஜய் தனது மனைவியுடன் முகவூரில் இருக்கும் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். அதன் பிறகும் பெற்றோர் தரப்பிலிருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த புதுமண தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விஜய் மற்றும் கலையரசி ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுமண தம்பதியினர் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எங்களை பெற்றோர் மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.