ஈரோடு மாவட்டத்திலுள்ள பழையபாளையம் சுத்தானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் “தான் வாங்கி வைத்த புது செருப்பில் இயற்கை உபாதை கழித்து அசிங்கம் செய்து வந்ததால் போட்டு தள்ளிட்டேன்” என குறிப்பிட்டு இறந்த நாயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் அந்த நபர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் தேனி மாவட்டத்தில் உள்ள மங்களம் பகுதியை சேர்ந்த தினேஷ்(25) என்பது தெரியவந்தது.

இவர் சென்னிமலை அருகே ஈங்கூரில் தங்கி கட்டிட வேலைகளுக்கு சென்று வந்துள்ளார். இவர் செருப்பின் மீது அடிக்கடி இயற்கை உபாதை கழித்த நாயை கோபத்தில் அடித்து கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான தினேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் நாயை கொன்று புகைப்படத்தை பதிவிட்ட தினேஷுக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.