கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட் பீல்டு சாலையில் ஜான் சேவியர் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் புலியகுளம் தாமு நகர் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று 14 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தார். இதனையடுத்து ஜானின் ஏ.டி.எம் கார்டு எந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இதனைப் பார்த்த ஒருவர் நான் எடுத்து தருகிறேன் என கூறி கார்டை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. உடனே அந்த நபர் ஜானிடம் ரகசிய எண்ணை டைப் செய்தால் தான் கார்டை வெளியே எடுக்க முடியும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி ஜானும் ரகசிய எண்ணை கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து கார்டை வெளியே எடுத்து அந்த நபர் ஜானிடம் வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து 70 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான் வங்கிக்கு சென்று கணக்கை ஆய்வு செய்த போது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி 70 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஜான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.