கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழியூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கலையரசி பெண்ணாடத்தில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலையரசி வேலைக்கு செல்வதற்காக கோழியூர் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கலையரசியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

உடனடியாக கலையரசி சுதாரித்துக் கொண்டு நகையை கையால் இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். விடுபட்ட வாலிபரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று நகையை பறிக்க முயன்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பதும், நண்பருடன் சேர்ந்து நகையை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்ததோடு, மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.