கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசக்குழி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று மதியம் சாத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் ராம்கி என்பவர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டிலை வாங்கியுள்ளார். அப்போது மது பாட்டிலுக்குள் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு ராம்கி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விற்பனையாளரிடம் கேட்டபோது, அவர் அலட்சியமாக பதில் அளித்தார்.

இதனை பார்த்த சிலர் அச்சத்தில் மது பாட்டில்களை வாங்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதனையடுத்து விற்பனையாளர் ராம்கியிடமிருந்து பல்லி கடந்த மது பாட்டிலை வாங்கிக்கொண்டு வேறு ஒரு மது பாட்டிலை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் அதிகாரி கூறியதாவது, அந்த மது பாட்டிலில் பல்லி கிடந்ததாக கூறுவதில் உண்மை இல்லை. அந்த பாட்டிலில் தூசி தான் கிடந்தது.

இருப்பினும் அந்த மது பாட்டிலுடன் கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து குவாட்டர் பாட்டில்களின் விற்பனையையும் நிறுத்தி வைக்க விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். அந்த மது பாட்டில்கள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.