கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராம்நகர் பிள்ளையார் கோவில் வீதியில் நிகில் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒருவர் நிகிலின் கடைக்கு சென்று 1 லட்சத்து 196 ரூபாய்க்கு எலக்ட்ரிக்கல் பொருட்களை வாங்கி கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பி விட்டதாக கூறி மெசேஜை காட்டியுள்ளார். அதே நபர் மறுநாள் நிகிலின் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது நிகில் நீங்கள் அனுப்பிய தொகை எனது வங்கி கணக்கிற்கு வரவில்லை என தெரிவித்தார். அதற்கு அந்த நபர் சர்வர் பிரச்சினை காரணமாக பணம் வராமல் இருக்கலாம் என கூறி 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்து, பணம் வரவில்லை என்றால் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றார். அதன் பிறகும் பணம் வராததால் நிகில் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த நபர் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். அந்த நபரின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிகில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட உக்கடத்தைச் சேர்ந்த காய்கறி கடை உரிமையாளரான ஷேக்அப்துல் காதர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.