திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடையில் அருணாச்சலம் என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரை விற்பனை செய்த பூக்களுக்கான பணத்தை பெரியசாமியின் வீட்டிற்கு சென்று கொடுப்பார். நேற்று மதியம் பூ விற்ற தொகையான 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டியில் வைத்துக்கொண்டு அருணாச்சலம் தச்சநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து ஒரு கோவில் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று டீ குடித்தார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அருணாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பணத்தை திருடிய முருகன் என்பவரை கைது செய்தனர். சில மணி நேரத்தில் திருடனை பிடித்து பணத்தை மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.